ஈரோடு நவ 8:
ஈரோட்டில் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டினை வைத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வெட்டுகாட்டுவலசு, நல்லி தோட்டம் அருகே விவேகானந்தர் நகரில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய மழை நீர் வடிகால் இல்லாததால் ஈரோட்டில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடங்களில் குளம் போல் தேங்கியுள்ளது.
தற்போது, மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து வருவதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. மேலும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 10 நாட்களுக்கு மேலாக மழை நீர் தேங்கி உள்ளதால், எங்கள் பகுதியை சேர்ந்த மக்களுக்கு காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதியில் மழை நீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். https://www.tnurbantree.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/