ஈரோடு சூலை 14: 

தமிழகத்தில் உள்ள விசைத்தறியாளர்களின் 13 மாத கால ஜி.எஸ்.டி., ரிட்டன் தொகை ஆயிரம் கோடி ரூபாயை திரும்ப வழங்க கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலும் செயற்கை இழை நூலை கொண்டு நாள் ஒன்றுக்கு 2 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த விசைத்தறிகளில் பயன்படுத்தும் செயற்கை இழை நூல் கொள்முதலுக்கு 12 சதவீத, ஜவுளி விற்பனைக்கு 5 சதவீதம் என ஜி.எஸ்.டி., தற்போது விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு 2017-–2018 ம் ஆண்டுகளில் 18 சதவீதமாக இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. நூல் கொள்முதலுக்கும், துணி விற்பனைக்கும் இடையிலான 7 சதவீத வரி வித்தியாசத்திற்கான தொகையை மத்திய அரசு விசைத்தறியாளர்களுக்கு கடந்த 2019 முதல் திரும்ப வழங்கி வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய 13 மாத கால கட்டத்தில் வழங்க வேண்டிய தொகை இன்னும் நிலுவையில் இருப்பதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, திரும்ப வழங்க வேண்டிய தொகை இந்திய அளவில் ஆயிரம் கோடியாகவும், தமிழக அளவில் 500 கோடியாகவும் நிலுவையில் உள்ளது. கொரனோ இரண்டு அலைகளாலும் தொழில் முடங்கி கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி உள்ள தங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி., தொகையை வழங்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 20 தறிகள் கொண்ட தறிகூடத்திற்கு ஏறத்தாழ 11 லட்சம் ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், மூலதன முதலீட்டை விட அதிகமான தொகை ஜி.எஸ்.டி.,யில் முடங்கி இருப்பதால் தங்களது தொழிலும் நலிவடைந்து மாற்றுத்தொழிலுக்கு செல்லும் நிலை உருவாகி இருப்பதாக விசைத்திறி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today