ஈரோடு டிச 15:

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சலுகைகள் தாமதமின்றி கிடைக்கப் பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கொ.ம.தே.க., பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது கடிதத்தில் கூறியதாவது:

கடந்த வாரம் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை அனுசரித்து இருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை முதல்வரால் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறீர்கள். தாங்கள் அறிவிக்கின்ற செயல்படுத்த நினைக்கின்ற நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுவதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகனத்திற்கு வேண்டி காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிற மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அவர்கள் பகுதியில் வசிப்பதற்கான வீடுகள் விரைவாக வழங்கப்பட வேண்டும்.

வேலை வாய்ப்புகளிலும் தாமதப்படுத்தாமல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தொழில் தொடங்குவதற்கு கடன் உதவிகள் பெற்றுத்தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு கல்விக் கடன் உதவி பெற்றுத்தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெற்றுத்தர வேண்டும்.

முதலமைச்சருடைய நேரடி பார்வையில் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று குறைகளை தீர்க்க ஏற்பாடுகள் அவசியம். முதல்வரின் முகவரி என்ற துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி அதிகாரி நியமிக்கப்பட்டு துரிதமாக குறைகளை தீர்க்க வழிவகுக்க வேண்டும். மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுடைய எதார்த்தமான நிலைமையை தான் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்.

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்ட போது கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளைத்தான் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து இருக்கிறேன்.

அரசு அறிவித்து இருக்கின்ற உதவிகளை மாற்றுத்திறனாளிகள் உடனடியாக பெற முடியவில்லை என்பதை மாற்றுத்திறனாளிகளின் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மாற்றுத்திறனாளிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டால் பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார். https://www.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today