ஈரோடு ஆக 30: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா  தாக்கம் அதிகரித்த போது நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது  அனைத்து மருத்துவமனையும் நிரம்பி வழிந்தது.

இதையடுத்து இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வளாகங்கள் கொரோனா சிறப்பு மையங்களாக செயல்பட்டன. இதில் தொற்று ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் வரும் செப்., 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகள் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு மையங்கள் காலி செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டம் கோபி தாலுகாவில் கொரோனா தோற்று பாதித்தவர்களுக்கு கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதிகளில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் கொரோனா மையமாக செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்கள் காலி செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி விடுதி மையத்தில் தங்கி இருந்த 37  பேரில் 10 பேர் கோபி அரசு மருத்துவமனைக்கும் மற்றவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கும் இடம் மாற்றப்பட்டனர்.

இதேபோல் கோபி கலை அறிவியல் கல்லூரி மையத்தில் தங்கியிருந்த 49 கொரோனா நோயாளிகளும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வரும் நாட்களில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாவோர் கோபி அல்லது ஈரோடு அரசு மருத்துவமனையில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

செய்தி ஈரோடு டுடே நிருபர்.
https://www.erode.today/