ஈரோடு ஆக 3:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து மீண்டும் கடந்த பத்து நாளாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், கோவை, சென்னையை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து பரவல் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநகர் பகுதியில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:- தற்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் மீண்டும் வீடு வீடாக சென்று சளி காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்க மாநகராட்சி சார்பில் 300 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள  அனைத்து வீடுகளுக்கும் தினமும் சென்று பரிசோதனை செய்வார்கள். கடந்த முறை இந்த பணிக்காக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இந்த முறை மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமே செல்வார்கள். மேலும் மாநகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த உள்ளோம்.

இதே போன்று பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி முறையாக பின்பற்ற படுகிறதா என்பது குறித்தும் கண்காணித்து வருகிறோம். மேலும் கடைகளில் அவ்வப்போது அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். கடை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக நுழைவு வாயிலில் சனிடைசர், கை கழுவ சோப் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களை மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். அதைப்போன்று கடைக்காரர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today