ஈரோடு சூலை 17:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் பாசனப்பகுதிக்கு வரும் 21ம் தேதி நீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி காளிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் கூறியது: காளிங்கராயன் பாசன பகுதிக்கு ஜூன் 15 முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்கப்படும். காளிங்கராயன் கால்வாயில் 76.77 கோடி ரூபாயில் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் 21 பாலம், 95 மதகுகள், தடுப்பு சுவர் பராமரிப்பு, சிறிய வாய்க்காலில் 1.5 கிலோ மீட்டர் துாரத்துக்கு கான்கிரீட் அமைத்து பராமரிப்பு போன்ற பணிகள் நடக்கிறது. இப்பணியை விரைவாக முடிக்க உதவியாக, கடந்த பருவத்தில் ஏப்ரல் 30ம் தேதிக்கு பதில் மார்ச் 30ம் தேதி நீர் நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணியை, எட்டு முதல் பத்து ஒப்பந்ததாரரிடம் வழங்காமல் நால்வரிடம் வழங்கினர். இருப்பினும் இரவு, பகலாக பணி செய்கின்றனர். இருப்பினும் நீர் வரத்தின்றி காளிங்கராயன் பாசன பகுதியில் பயிரிடப்பட்ட கரும்பு, வாழை நீரின்றி கருகுகிறது. சில நாள் பெய்த மழை கை கொடுக்கவில்லை. நடப்பு பருவத்தில் 2,500 ஏக்கர் வாழை 5,000 முதல் 7,000 ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வார்கள். தவிர மஞ்சளுக்கு ஏற்ற ஜூனில் சாகுபடி செய்யாமல் போனது. உரிய பருவத்தில் மஞ்சள் சாகுபடியை துவங்க முடியாததால், வளர்ச்சி குறையும். விரலி வளர்ப்பு பாதிக்கும். இப்பாசன பகுதியில் 24 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்து, மகசூல் ஈட்ட வேண்டி உள்ளதால், உடன் நீர் திறக்க கோரி வருகிறோம். பவானிசாகர் அணையில், நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 95.46 அடி நீர் உள்ளது. நீர் வரத்தும் தொடர்ந்து சீராகவும், அதிகரித்தும் காணப்படுகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று வரும் 21ம் தேதி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 21ம் தேதி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட துவங்கி உள்ளனர்.இவ்வாறு கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today