ஈரோடு நவ 27:

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று பட்டா மாறுதல் முகாம்கள் நடத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி வாரத்தில் 2 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவின் பேரில் அனைத்து தாலுகாக்களிலும் உள்வட்டங்கள் வாரியாக துணை கலெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தலைமையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ஈரோடு தாலுகாவுக்கு உள்பட்ட ஈரோடு மேற்கு உள்வட்டம் கங்காபுரம் கிராமத்தில் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கூட வளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடந்தது. முகாம்முக்கு ஈரோடு ஆர்.டி.ஓ., பிரேமலதா தலைமை தாங்கினார். முகாமில் பட்டா மாறுதல் கேட்டு 50 பேர் மனுக்கள் கொடுத்தனர்.

இதுபோல் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை, தொகுப்பு வீடு பராமரிப்பு நிதி, இலவச வீட்டு மனை பெற தடையின்மை சான்று என பல்வேறு கோரிக்கைகளுடன் மொத்தம் 122 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் உடனடி தீர்வாக 4 பேருக்கு பட்டா மாறுதல் உத்தரவினை ஆர்.டி.ஓ. பிரேமலதா வழங்கினார். இந்த முகாமில் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், நில வருவாய் ஆய்வாளர் ரமேஷ், கிராம நிர்வாக அதிகாரி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/