ஈரோடு ஆக 16:

பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 17 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடியில் இருந்து வருகிறது.நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.84 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,544 கன வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு, 100 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 200 கன அடியும் என மொத்தம் ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஈரோட்டில் புறநகர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. வரட்டுப்பள்ளம் பகுதியில் அதிகபட்சமாக 14 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதைப்போல் பெருந்துறை மொடக்குறிச்சி கோபி போன்ற பகுதியிலும் மழை பெய்துள்ளது. பெருந்துறையில் 9 மி.மீட்டர், மொடக்குறிச்சியில் 8 மி.மீட்டர், கோபியில் 6.8 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today