ஈரோடு டிச 3:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக புறநகர் மாவட்ட பகுதிகளான பெருந்துறை, கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, அந்தியூர், தாளவாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகர் பகுதியில் பெரிய அளவு மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே வந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மலர் பகுதியில் நேற்று மாலை 5.30 மணி அளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. 6 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.
பின்னர் இரவு 10 மணி முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து விடிய விடிய சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. திடீர் மழையால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடுகளில் கனமழை காரணமாக நீர் தேங்கி நின்று சாலை சேரும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் அவதி அடைந்தனர்.
குறிப்பாக கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் ரோடுகள் குண்டும், குழியுமாக, சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இந்தப் பகுதியில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. ஈரோடு வ.உ.சி., நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. ஆனால் இன்று காலை வியாபாரிகள் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.ஒரு சில வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்தனர். இந்திய சில்லரை விற்பனை, மொத்த விற்பனைக்காக வந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
மாவட்டத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாநகர் பகுதிகளில் தான் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் குண்டேரிபள்ளம், கவுந்தபாடி, நம்பியூர், சத்தியமங்கலம், பவானி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: ஈரோடு- 58, குண்டேரிப்பள்ளம் 17, கவுந்தப்பாடி- 15.2, நம்பியூர் 12, சத்தியமங்கலம் 10, பவானி 5.2, அம்மாபேட்டை 5.2, கொடிவேரி அணை 4.2, கோபி 2, வரட்டுப்பள்ளம் 2. https://www.tnagrisne.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/