ஈரோடு செப் 27:

ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 784 பேரை போலீசார் கைது செய்தனர்.மத்தியஅரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், மின்சார சட்ட திருத்த மசோதா-–2020ஐ திரும்ப பெறக்கோரியும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கும் விற்பதை கண்டித்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்கி, விலையை குறைக்க வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் விவசாய சங்கங்கள், தொழிற்சங்கத்தினர் நேற்று பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகரில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப்., எல்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர், தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவதற்காக ஈரோடு காளை மாட்டு சிலை அருகே நேற்று திரண்டு, கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த போராட்டத்திற்கு தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் முருகையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி, முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, திராவிட கழகம் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், மாநகர துணை தலைவர் ராஜேஷ், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாஷா, திராவிட விடுதலைக்கழகத்தின் அமைப்பு செயலாளர் ரத்தினசாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்து கோரிக்கைளை விளக்கி பேசினர்.

இதைத்தொடர்ந்து, ரயில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக காளை மாட்டு சிலையில் இருந்து ஊர்வலமாக ரயில்வே ஸ்டேஷன் நோக்கி சென்றனர். அப்போது, அங்கு ஏ.டி.எஸ்.பி., கனகேஸ்வரி தலைமையில் டவுன் டி.எஸ்.பி., ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயா, கோபிநாத், சோமசுந்தரம், நீலாதேவி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ரயில்வே ஸ்டேஷன் நுழைவு பாதையை இரும்பு பேரிக்கார்டுகளை கொண்டு அடைத்து, ரயில் மறியலுக்கு வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலிலேயே சாலையில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 106 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

ஈரோடு – மேட்டூர் ரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்வஸ்திக் கார்னர் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் அக்கீம் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12பேரை போலீசார் கைது செய்தனர்.$ பெருந்துறைபெருந்துறை அண்ணா சிலை தபால் அலுவலகம் முன் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாநில துணை தலைவர் துளசிமணி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் சின்னசாமி, சி.ஐ.டி.யு., பழனிசாமி, தொ.மு.ச., மனோகரன், தி.மு.க., விவசாயிகள் அணி பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் அணி (சி.பி.எம்.,) முத்துபழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 81 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 784 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/