ஈரோடு நவ 30:

தொடர்ந்து பணி வழங்க மினி கிளினிக் டாக்டர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி உள்ளனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிக அடிப்படையில் பணியாற்ற டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு 58 டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தொகுதிப்பூதியமாக மாதம் ரூ.60 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து மினி கிளினிக்குகள் மூடப்பட்டு கொரோனா வார்டுகள், கோவிட் கேர் சென்டர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில்  மினி கிளினிக் டாக்டர்கள் பணியாற்றி வந்தனர். இதனிடையே தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டதையடுத்து வருகின்ற 4ம் தேதியுடன் பணியில் விடுவிக்கப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

இதற்கு ஈரோடு மாவட்டத்தில் மினி கிளினிக்குகளில் பணியாற்றிய தற்காலிக டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், கொரோனா பணிகளில் கடுமையாக வேலை செய்து வந்ததை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என்பதோடு, பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கூறி நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், இது தொடர்பாக மனு அளித்தனர். https://www.pmmodischeme.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/