ஈரோடு சூலை 1:

கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று தோல் பதனிடுவோர் சங்கம் சார்பில் சுற்றுச்சூழல்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்ட தோல் பதனிடுவோர் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் நேற்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து கோரிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். பின்னர் சங்கத்தின் பொருளாளர் அப்துல்காதர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தோல் பதனிடும் தொழில் மிகவும் நசிந்து வருகின்றது. பதனிடப்படும் தோல் 75 சதவீதம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. உள்ளூர் தேவை என்பது மிகவும் குறைவாகும். இத்தொழிலில் பங்காளதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் ஆதிக்கத்தை சமாளிக்க முடியாத நிலை இருந்து வருகின்றது. தொழிற்சாலைகளில் தற்போது 10 சதவீதம் தான் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஏராளமானோர் வேலை இழந்து வருகின்றனர்.

ஈரோட்டில் 30க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வந்த நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 20 தொழிற்சாலைகள் மட்டுமே செயல்படுகின்றது. மாநிலம் முழுவதும் 200 தொழிற்சாலைகள் செயல்படுகின்றது. இத்துறையின் முக்கிய பிரச்சனையாக இருப்பது சுற்றுச்சூழல் தான். எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம்.

ஏற்கனவே இத்திட்டம் கடந்த தி.மு.க, ஆட்சி காலத்தில் பரிசீலிக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டன என கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே