ஈரோடு நவ 29:

ஈரோட்டில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 1,304 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம், தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. எம்எல்ஏ திருமகன் ஈவெரா முன்னிலை வகித்தார். இம்முகாமினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்து பேசியதாவது,

ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுனர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மாவட்டத்தில் தனியார் துறையில் உள்ள 16,640 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 174க்கும் மேற்பட்ட தனியார் தொழில் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

இம்முகாமில் 3,463 ஆண்கள், 2,850 பெண்கள் என மொத்தம் 6,313 வேலைநாடுனர்கள் பதிவு செய்ததில், 1,304 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 55 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் என மொத்தம் 68 மாற்றுத்திறனாளி வேலைநாடுனர்கள் பதிவு செய்ததில், 12 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திறன் பயிற்சிக்கு 288 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பேசினார். முகாமில், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். https://www.tnprivatejobs.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/