ஈரோடு டிச 16:
ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மானாவாரியாக சாகுபடி செய்திருந்த மரவள்ளி கிழங்கு பயிர் அறுவடை துவங்கியதுடன் விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் மானாவாரி பகுதியில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்து கடந்த 1 முதல் அறுவடை நடந்து வருகிறது.
விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் உள்ளமாவட்டங்களில் டிசம்பர் 1ம் தேதி முதல் மரவள்ளி கிழங்கு அறுவடை நடக்கிறது.
இந்தாண்டு அதிகமாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த நிலையில் வடகிழக்கு பருவமழை அதிகமாகவும், தொடர்ந்தும் பெய்ததால் மரவள்ளியை மாவு பூச்சி தாக்கி சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கால் 40 சதவீத பயிர் கிழங்கு பாதித்து 60 சதவீதம் அறுவடையாகும் நிலை உள்ளது.
இதே நிலைதான் பிற மாவட்டங்களிலும் உள்ளது. கடந்த மாதம் அறுவடைக்கு முன் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.5,000 முதல் ரூ.5,200 என்று இருந்தது. நேற்று முன்தினம் ரூ.5,700 முதல் ரூ.6,000 ஆனது.
அதேநேரம், கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் மரவள்ளி கிழங்கை பல்வேறு உணவுக்கு பயன்படுத்துவார்கள். அங்குள்ள வியாபாரிகள் ஒரு டன் ரூ.7,000க்கு வாங்கி செல்கின்றனர். வரும் ஜனவரி மாதம் இறுதி வரை சீசன் நீடிக்கும் என்பதால், மேலும் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இவ்வாறு கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today