ஈரோடு டிச 1:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. ஈரோடு வ.உ.சி, நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தாளவாடி போன்ற பகுதியில் இருந்து அதிக அளவு காய்கறிகள் வரத்தானது.
ஆனால் கனமழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்றது. வரத்து குறைவால் தேவை அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை விற்றது. ஆனால் நடுத்தர பெண்கள், ஏழை மக்கள் கடும் அவதி அடைந்தனர். தக்காளி விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்நிலையில் தக்காளி வரத்து அதிகரித்து விலையும் சரிய தொடங்கியது.
இந்த ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையானது. இந்நிலையில் தக்காளியை தொடர்ந்து கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கத்திரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. மழை மற்றும் குளிர் காலங்களில் கத்திரிக்காய் விற்பனை அதிகரிக்கும்.
தற்போது மழைக்காலம் என்பதால் கத்திரிக்காய் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கனமழையால் தமிழகம் முழுவதும் கத்திரிக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் கத்திரிக்காய் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.130-க்கு விற்பனையானது.
இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.30- க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 100 ரூபாய் உயர்ந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 8,000 கிலோ தக்காளி வரத்து ஆகும். தற்போது மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் வெறும் 800 கிலோ மட்டுமே வரத்தாகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் மற்ற காய்கறி விலையும் சற்று அதிகரித்துள்ளது.
இன்று ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவுக்கு விற்பனையில் வருமாறு: வெண்டைக்காய் ரூ.75, மிளகாய்- ரூ.80, முருங்கைக்காய் – ரூ.150, முள்ளங்கி- ரூ.70, பீர்க்கங்காய்- ரூ.70, பாவைக்காய் – ரூ.70, இஞ்சி- ரூ.60, முட்டைக்கோஸ் -ரூ.35, கேரட்- ரூ.60, புடலங்காய் ரூ.70, பட்டை அவரை ரூ.90, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் 40 ரூபாயாகும். https://www.tnagrisne.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/