ஈரோடு நவ 12:

ஈரோடு எழுத்தாளர் சந்திரா மனோகரனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நற்றமிழ் பாவலர் விருது வழங்கப்பட்டது. ஈரோடு செங்கோடம்பாளையம் டெலிகாம்சிட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரா மனோகரன் எழுத்தாளர். இவர் எழுதிய ‘அசையும் இருள்’ என்ற புதுக்கவிதை புத்தகத்துக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை கவிஞரும் எழுத்தாளருமான சந்திரா மனோகரனுக்கு ‘நற்றமிழ் பாவலர்’ விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிதையும், முற்றிலும் தமிழ் வார்த்தைகளை கொண்டு எழுதப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் செ.சரவணன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் இயக்குனர் கோ.விஜயராகவன் ஆகியோர் விருதினை வழங்க, எழுத்தாளர் சந்திரா மனோகரன் விருதினை பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் சந்திரா மனோகரன் 40 ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். 1992-ம் ஆண்டு முதல் புத்தகத்தை வெளியிட்டார்.

இதுவரை 34 புத்தகங்கள் வெளியிட்டு உள்ளார். கவிதை, சிறுகதை, புதினம், மொழி பெயர்ப்பு புத்தகங்கள் அவரது உழைப்பில் வெளி வந்து உள்ளன. இவர் ஈரோட்டில் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இயற்பெயர் மனோகரன். இவரது மனைவி சந்திரா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. மனைவி சந்திராவின் பெயரையும் இணைத்து சந்திரா மனோகரன் என்ற பெயரில் கதை, கவிதைகள் எழுதி வருகிறார். இவருக்கு நிர்மல், நிரஞ்சன் என்று 2 மகன்கள். 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இவரது கவிதைகள் ஏற்கனவே பல்வேறு இலக்கிய பரிசுகள் வென்று உள்ளன. தமிழக அரசால் முதல் முறையாக நற்றமிழ் பாவலர் விருதும், பதக்கமும், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் பெற்று உள்ளார். ‘இயற்கையையும், அன்றாட வாழ்வின் எதார்த்தங்களையும் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் மாற்றுவது எனது இலக்கிய பயணமாகும்’ என்கிறார் எழுத்தாளர் சந்திரா மனோகர். அவருக்கு இலக்கிய வட்டத்தினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். https://www.awards.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/