ஈரோடு டிச 22:
ஈரோடு மாவட்டத்தில் 7.39 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு துணிப்பையில் வழங்கப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 லட்சத்து 55 ஆயிரத்து 968 ரேசன் கார்டுகளில், 7 லட்சத்து 39 ஆயிரத்து 767 அரிசி கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான பொருட்கள் ஆங்காங்கே உள்ள குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பரிசு தொகுப்பில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 4 வகையான பொருட்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமும், மற்ற பொருட்கள் பொதுவிநியோக திட்டத்துறை மூலம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான துணிப்பை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர். https://www.tnpds.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today