ஈரோடு சூலை 24:
ஈரோடு நகர் நல மையத்தில் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போடும் முகாமினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். பல்வேறு வைரஸ் நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி குழந்தை பிறந்தவுடன் அல்லது 24 மணி நேரத்துக்குள் முதல் தடுப்பூசியாக காசநோய் தடுப்பூசி போடப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மஞ்சள் காமாலை நோய், போலியோ நோய், வயிற்று போக்கு நோய், கக்குவான் நோய், தட்டமை நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதில் பெரும்பாலான தடுப்பூசிகள் அரசு ஆஸ்பத்திரிகளிலேயே போடப்படுகிறது. ஒரு சில தடுப்பூசிகள் மட்டும் தனியார் மருத்துவமனைகளில் போடப்படுகிறது. நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி இதுவரை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போடப்பட்டு வந்தது. இந்நிலையில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி (பி.சி.வி.) போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சி காந்திஜி ரோட்டில் உள்ள நகர் நல மையத்தில் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், நகர்நல அலுவலர் முரளிசங்கர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டார்கள். நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கொடுத்து குழந்தைகளுக்கு போட வேண்டும். ஆனால் தற்போது அரசு மருத்துவமனை, துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. குழந்தை பிறந்து 1½ மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசியும், 3½ மாதத்தில் 2-ம் டோஸ் தடுப்பூசியும், 9-வது மாத்தில் 3-வது டோஸ் தடுப்பூசியம் என 3 முறை நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி குழந்தைகளுக்கு போடப்படுகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போட்டு, நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today