ஈரோடு நவ 27:

கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் ரெயில்வே துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பயணிகள் ரெயில்கள் நிறுத்தப்பட்டு சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயங்கி வந்தன. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்கும் முறை கொண்டு வரப்பட்டது. மேலும் முக்கிய நடவடிக்கையாக ரெயில் நிலையங்களில் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நடைமேடை கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட்  முதலில் ரூ.10-க்கு விற்கப்பட்டது. பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதன் காரணமாக பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.பிளாட்பாரம் கட்டணத் தொகையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக பிளாட்பாரம் கட்டணம் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால் பழையபடி ரெயில்கள் இயங்க தொடங்கியுள்ளது. இதையடுத்து பிளாட்பாரம் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம்  பிளாட்பாரம் கட்டணத்தை குறைத்தது. இதன்படி மீண்டும் பழைய கட்டணமான ரூ.10 வசூலிக்கப்படும் என அறிவித்தது. இவை உடனடியாக அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது. அதன்படி ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று முதல் பிளாட்பாரம் கட்டணம் ரூ.10-க்கு விற்கப்பட்டது. இந்த கட்டண குறைப்புக்கு  பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். https://www.indianrailway.gov.in