மொடக்குறிச்சி செப் 15:
அரச்சலூர் பகுதியில் புதிதாக பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் அமைப்பதற்கான இடத்தில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் புதிதாக பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் அமைப்பதற்கான இடத்தினை ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நகர்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: அரச்சலூர் பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் அமைப்பதை நிறைவேற்றும் வகையில் இப்பகுதியிலுள்ள பொதுப்பணி துறைக்கு சொந்தமான இடத்தில் அமைப்பதற்கான ஆய்வுப்பணி நடைபெற்றது. இப்பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதன் மூலம், இங்கு சாலைகளில் நிற்கும் பேருந்துகளல் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். அரச்சலூர், ஈரோடு சோலார், கனி ராவுத்தர் குளம் ஆகிய இடங்களில் பேருந்து நிலையம் அமைப்பது மேலும் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள 100 பெரிய திட்டங்கள் குறித்து முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டங்கள் தொடர்ந்து படிப்படியாக செயல்படுத்தப்படும், என்றார். கீழ்பவானி பாசன வாய்க்காலில் குறித்த காலத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. ஆனால் வாய்க்கால் கரை உடைப்பின் காரணமாக நிறுத்தப்பட்ட தண்ணீர் திறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இடையில் நிறுத்தப்பட்ட 24 நாட்கள் தண்ணீர் விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இறுதியில் கூடுதலாக திறந்துவிடப்படும். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் துரிதமாக பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதற்கு அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் நல்ல ஒத்துழைப்பு அளித்தனர் என தெரிவித்தார்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/