ஈரோடு டிச 30:

ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வருங்காலத்தில் ரோடுகளை தோண்டாமல் கேபிள்கள் பதிக்கும் நடவடிக்கையாக 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார் சிட்டி (பொலிவுறு நகரம் ) திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக மதிப்பில் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும், இன்றும் சில மாதங்களில் பணிகள் நிறைவடைந்து சிரமங்கள் தீரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு குழாய்கள் பதித்த சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.

இதனால் இந்த சாலைகளில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. இந்தநிலையில் ஈரோட்டில் சில பகுதிகளில் மீண்டும் சாலைகளில் பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உள்பட்ட திண்டல், வில்லரசம்ப்பட்டி பகுதிகளில் இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆனால், இந்த பணி நிறைவடைந்த பகுதிகளில் உடனடியாக தார் ரோடு போடும் பணிகள் தொடங்கி இருப்பது அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் அளித்து உள்ளது.

இதுபற்றி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஸ்மார்ட் ரோடுகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக பெரியார் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்த பணி நடந்தது. தற்போது திண்டல் மற்றும் வில்லரசம்பட்டி பகுதிகளில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ரூ.29 கோடியே 42 லட்சம் செலவில் 22.99 கிலோ மீட்டர் தூரம் சாலையோரத்தில் குழாய்கள் பதிக்கப்படும். இந்த குழாய்கள் வருங்கால தேவைக்காக பதிக்கப்படுகிறது.இதற்காக ஒரு அடி விட்டமுள்ள பெரிய அளவிலான குழாய் சாலை ஓரத்தில் பதிக்கப்படுவதுடன், ஆங்காங்கே இணைப்பு பகுதிகளும் அமைக்கப்படுகின்றன. வருங்காலத்தில் கேபிள்கள் அமைக்க சாலை தோண்டுவதை தடுக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

மின்சார கேபிள்கள், தொலைபேசி கேபிள்கள் உள்ளிட்டவை புதிதாக போடும்போது இனிமேல் சாலை தோண்டும் நிலை வராது. குழாய் பதிக்கப்பட்டதும், அந்தந்த பகுதி வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட இணைப்புகள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து தார் சாலை போடப்படும். இவ்வாறு ஆணையாளர் சிவக்குமார் கூறினார். https://www.tnurbantree.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today