ஈரோடு சூன் 27: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.100 ஐ கடந்து பல நாட்களாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.97 விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக அதிகரித்து வந்தது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.76 க்கு விற்பனையானது. இன்று 30 பைசா அதிகரித்து மாவட்டத்தில் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.6 பைசாக்கு விற்பனை செய்யப்பட்டது.இதைப்போல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.93.81-க்கு விற்பனையானது. இன்று 23 பைசா அதிகரித்து ரூ.94.04 -க்கு விற்பனையானது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே