ஈரோடு சூலை 29:
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். அவரிடம் சென்னிமலை தற்சார்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் தலைமையில் ஒரு கோரிக்கை மனுவை விவசாயிகள் வழங்கினார்கள். அந்த மனுவில் கூறியதாவது: தமிழக அரசு கடந்த பிப்., 2ம் தேதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து உள்ளது. ஆனால் தற்போது மறு ஆய்வு என்ற பெயரில் பயிர்களை ஒப்பீடு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதில் விவசாயிகள் பலரும் பெற்ற பயிர்க்கடன் விதிமீறல் என்று வகைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் கடன் தள்ளுபடி பெற்ற 50 சதவீதம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் விவசாயிகளுக்கு கிடைத்த இந்த சலுகையும் பறிபோனால் இது விவசாயிகளின் மத்தியில் அரசின் மீது அதிருப்தி ஏற்படுத்தும். எனவே அனைத்து கடன்களையும் தகுதியானவை என்று கருதி, தள்ளுபடி வழங்க அதிகாரிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today