ஈரோடு சூலை 29:
ஈரோடு மாவட்ட மருத்துவத்துறை பணியாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமையில் ஈரோடு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணியிடம் மனு வழங்கி பேசினர். பின்னர் அவர்கள் கூறியது: பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் லேப் டெக்னிசியன், டேட்டா எண்ட்ரி, ஜெனரல் நர்சிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாவட்ட சுகாதார சமூகம் மூலம் 200 பேர் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக பணி செய்கின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவர்கள் தொடர்ந்து பணி செய்து வரும் நிலையில், கொரோனா தொற்று நிலையிலும் பணியை தொடர்ந்தனர். இவர்களுக்கு ஜூன் மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இத்தொழிலாளர்கள், போக்குவரத்து, அன்றாட செலவுக்கு வழி இன்றி தவிக்கின்றனர். இவர்களுக்கு ஜூன் மாத சம்பள நிலுவையுடன், ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும். கலெக்டரால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை, அவர்களது வேலை நிலைக்கு ஏற்ப ஊதிய விகிதத்தை மாற்றி உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு கோரியுள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today