ஈரோடு நவ 23:

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை  வருவாய் அலுவலர் முருகேசனிடம் வழங்கினர். அப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய சடையம்பாளையம் பகுதியில் 16 மீட்டர் உயரத்தில் 7.50   லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்த்தேக்க தொட்டி கட்டும் போது அதற்கு அமைக்கப்பட்ட தூண்களில் வெடிப்பு ஏற்பட்டு பழுது பார்த்து சரி செய்யப்பட்டு, கலர் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேல்நிலைத் தொட்டியில் தண்ணீர் ஏற்றும்போது டேங்கில் இருந்து தண்ணீர் அதிக அளவில் ஒழுகுகிறது.

தொடர்ந்து பிளாஸ்டர் பேஸ்ட்  ஒட்டி தண்ணீர் ஒழுகுவதை சரி செய்து வருகிறார்கள். இருந்தாலும் தண்ணீர் தொடர்ந்து ஒழுகி கொண்டே இருக்கிறது. எனவே பெரிய சடையம்பாளையம் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் முழு கொள்ளளவு நீர் ஏற்றி தண்ணீர் ஒழுகுவதை பார்வையிட்டும் மேல்நிலை தொட்டி கட்டுமானப் பணிகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார். https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/