ஈரோடு சூலை 28:

இலவச வேட்டி, சேலை உற்பத்தி தொடங்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழகம் முழுவதும் 209 விசைத்தறி தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம், தமிழக அரசின் இலவச வேஷ்டி, சேலை ஆண்டு தோறும் ஜூன் இரண்டாம் வாரத்திலோ அல்லது ஜூலை முதல் வாரத்தில் இருந்து உற்பத்தி செய்ய விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மூலம் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்தார்கள். ஆனால் இந்த வருடம் ஜூலை கடைசி வாரம் ஆகியும் உற்பத்தி பணியை தொடங்காமல் இருப்பதால், தமிழகம் முழுவதுமுள்ள பல விசைத்தறி தொடக்க நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், வேலை வாய்ப்பினை இழந்து அவர்களை சார்ந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி மிகவும் சிரமப்பட்டு, இந்த வைரஸ் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை உற்பத்தி செய்த பள்ளி சீருடைகள் ரகங்களுக்கு, இதுவரை விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு 25 சதவீத நிலுவை தொகை அரசின் சார்பில் கொடுக்கப்படாத காரணத்தால் உறுப்பினர்களுக்கு கூலி கொடுக்க முடியாத சூழலுக்கு உள்ளார்கள். எனவே தமிழக முதலமைச்சர் விசைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு தமிழக அரசின் இலவச வேட்டி சேலை உற்பத்தி பணியை தொடங்கவும், மேலும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டிய முந்தைய நிலுவை தொகை அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் கொடுத்து நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை காக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today