ஈரோடு ஆக 25:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி கடந்த 9ம் தேதி முதல் 23ம் தேதி காலை வரை மாவட்டத்தில் புதிய நேர கட்டுப்பாடுகளை விதித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார். அதன்படி பால், மருந்தகம், மருத்துவமனை தவிர மற்ற அனைத்து கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் கொரோனா பரவ கூடிய அதிகம் பரவக் கூடிய வாய்ப்புள்ள 24  இடங்களில் உள்ள கடை விதிகள் அனைத்தும் சனி, ஞாயிற்று கிழமைகளில் மூட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அனைத்து கடைகளும் மாலை 5 மணியுடன் மூடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் முழுவதும் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் காலை 6 முடிவுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழக அரசு மேலும் ஊரடங்கை இரண்டு வாரம் நீட்டித்து பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.

அதன்படி இனி இரவு 10 மணி வரை அனைத்து கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் இந்த நடைமுறைகள் நேற்று முதல் அமல் படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருந்தன. திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன. கொடிவேரி அணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடிவேரி அணைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அவர்கள் சந்தோசமாக குளித்து அந்தப் பகுதி விற்கப்படும் மீன்களை விரும்பி சாப்பிட்டனர். ஈரோட்டை பொருத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகள் புதிய நேர கட்டுப்பாட்டின் போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி  டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதிய நேர கட்டுப்பாட்டினால் 30 சதவீதம் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்போது இரவு 8 மணி வரை கடையில் செயல்படுவதால் விற்பனை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் தொழில் நிறுவனங்கள், கடைகள், விசைத்தறிகள் திறக்கப்பட்டுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும் கடைகள் வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடைகளில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அவ்வப்போது கடைகளில் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீரும்  கடைகளுக்கு அபராதம் விதிப்பார்கள்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today