ஈரோடு சூலை  2: பனை தொழிலாளர் நலவாரியம், தென்னை விவசாயிகள் நலவாரியத்தை மீண்டும் புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் வக்கீல் செ.நல்லசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வருக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியது: இந்தியாவில், தமிழகத்தில் தான் பனை, தென்னை மரங்கள் அதிகம். இதை நம்பி பல லட்சம் விவசாயிகள், தொழிலாளர்கள், பனை, தென்னை விளை பொருளின் உப பொருட்கள் விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக்குதல் பணியில் பல லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த போது குமரி அனந்தன் தலைமையிலான பனை தொழிலாளர் நலவாரியத்தையும், ராஜ்குமார் தலைமையிலான தென்னை விவசாயிகள் நலவாரியத்தையும் அரசு கலைத்துவிட்டது.

கடந்த பத்தாண்டுகளாக அவை புதுப்பிக்கப்படவில்லை. 2021ல் மீண்டும் தி.மு.க., அரசு வந்த நிலையில், இந்நலவாரியங்களை புதுப்பித்து பனை, தென்னை விவசாயிகள், தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். கேரளாவை போல தமிழகத்திலும் நீரா இறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. கடந்த 2017 ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி, பல்வேறு நிபந்தனைகளுடன் நீரா இறக்க அனுமதி வழங்கினார். நிபந்தனைகளை முற்றிலும் அகற்றினால் மட்டுமே நீரா இறக்கி சந்தைப்படுத்துவது சாத்தியமாகும்.

100 தென்னை மரம் உள்ள விவசாயி, ஐந்து தென்னையில் இருந்து மட்டும் நீரா இறக்கலாம் என விதி கூறுகிறது. தனிப்பட்ட முறையில் நீரா இறக்கி விற்க முடியாது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவிவசாயிகள் இணைந்து, தென்னை உற்பத்தியாளர் கம்பெனி ஏற்படுத்தி தலா 1000 ரூபாய் செலுத்தி, அதை பதிவு செய்து, அரசு அனுமதியுடன் இறக்கி, எடுத்து சென்று சந்தைப்படுத்த வேண்டும் என கூறுகிறது. நிபந்தனையால் அப்போதைய முதல்வர் பழனிசாமி சென்னை கோட்டையில் துவக்கி வைத்த மூன்று நீரா உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டுவிட்டன. இன்று நீரா எங்கும் இறக்கவில்லை. எனவே, விவசாயிகள், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற முறையில் நீரா இறக்கவும், பனை, தென்னை நலவாரியத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் முயல வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே