ஈரோடு டிச 10:

கொரோனாவால் தாய், தந்தையினை இழந்த இலங்கை தமிழர் குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அரசாணைபடியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் படியும், அரசாணையின் வழிகாட்டுதலின் படியும் கொரோனா நோய் தொற்றின் காரணமாக தாய், தந்தையினை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும் தாயையோ அல்லது தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் முதல் -அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மற்றும் முகாமிற்கு வெளியே போலீஸ் நிலையத்தில் பதிவு செய்து வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும், கொரோனா நோய் தொற்றின் காரணமாக தாய், தந்தையினை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

இதேபோல் தாயையோ அல்லது தந்தையையோ 2 பேரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல் -அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, மேற்கண்ட கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற ஈரோட்டில் முன்னாள் படைவீரர் மாளிகையில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை அணுகலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். https://www.ssa.gov

ஈரோடு டுடே
https://www.erode.today