ஈரோடு அக். 20:

நமக்கு நாமே திட்டத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஈரோடு மாநகராட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி வளர்ச்சித்திட்ட பணிகளில் பொதுமக்களும் தங்களது பங்களிப்பை மேற்கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உதாரணமாக ஒரு பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10 லட்சம் செலவாகும் என்றால், அந்த பகுதி மக்கள் அதற்கான செலவில் பாதித்தொகையை அதாவது ரூ.5 லட்சம் தந்தால் அந்த கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை அப்பகுதி மக்களை மேற்கொள்ள அனுமதிஅளிக்கப்படும்.

மேலும் மீதி உள்ள ரூ.5 லட்சம் தொகையை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஏற்கனவே ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் குடியிருப்பு நல சங்கத்தினர், பொது அமைப்பினர், தொழிலதிபர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

அந்தக் கூட்ட முடிவில் ஈரோடு சக்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்காக தாங்கள் பாதி தொகையை வழங்க மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அதைத்தொடர்ந்து திண்டல் பகுதியில் பூங்காவுக்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம், கரூர் சாலைப் பகுதியில் கழிவு நீர் சாக்கடை அமைப்பது உள்ளிட்ட 10 பணிகள் மேற்கொள்ள அப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதற்கான ஒப்புதல் கேட்டு அரசுக்கு திட்ட  மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tncsc.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/