ஈரோடு அக். 27:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம வாய்ப்பு கொள்கை அரசாணையை அமல்படுத்திடக்கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலு தலைமையில் நேற்று 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை தனித்தனியாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜியிடம் அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்ப்பு கொள்கையை வெளியிடவும், தனியார் நிறுவனங்களில் 5 சதவீதம் பணிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் சட்டத்தையும் அமல்படுத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை நிவர்த்தி செய்திட வருவாய் கோட்ட அளவில் கோட்டாட்சியரால் மாதம் ஒரு முறை குறைதீர் கூட்டம் நடத்தப்படவேண்டும். மாற்றுத்திறனாளி மாவட்ட அலுவலகங்களில் உதவித்தொகை மற்றும் மூன்று சக்கர மோட்டர் வாகனம், மூன்று சக்கர சைக்கிள் போன்றவற்றை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, கோரிக்கை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார். இதில், மாவட்ட உதவி தலைவர்கள் மாரிமுத்து, ராம்தாஸ், ராஜு, மாவட்ட செயலாளர்கள் சுப்ரமணி, சகாதேவன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். https://www.scd.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/