ஈரோடு செப் 25:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக கடந்த 19ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.இந்நிலையில் மூன்றாவது கட்டமாக நாளை மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:-
கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த, 12, 19ல் இரண்டு கட்டமாக தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. மூன்றாம் கட்டமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, 579 இடங்களில் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர்கள், பஞ்சாயத்து செயலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். தேவையான அடிப்படை வசதிகளை செய்து, ஒவ்வொரு மையத்திலும் தலா, 200 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்த திட்டமிட வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தவும், டேட்டாவை பதிவு செய்ய கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர்களை ஈடுபடுத்தலாம். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூட்டம் நடத்த வேண்டும். தவிர, தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் உள்ள இடங்களை அடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் கலெக்டர் பிரத்திக் தயாள், ஆர்.டி.ஓ.க்கள் ஈரோடு பிரேமலதா, கோபி பழனிதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/