ஈரோடு டிச 4:
ஒமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து ஈரோடு வந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தற்போது கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமிக்ரான் எனும் அதிவீரியம் கொண்ட தொற்று பரவி வருகின்றது. இந்தியாவின் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தனிமைப்படுத்த ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி உட்பட 23க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் உஷார் படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த 13 பேர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை முடிந்து நெகட்டிவ் என்ற முடிவுடன் அவரவர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
எனினும் அவர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுடன் தொடர்பு இருப்பவர்களும் ஒரு வாரத்திற்கு வெளியே வரவேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளை தினமும் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் பாதிப்பு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் வெளியே செல்ல அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.tnhealth.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/