ஈரோடு டிச 31:
உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அபபோது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் உலகில் 90 நாடுகளுக்கு பரவியது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு ஏழு நாள் தனிமை கட்டாயப்படுத்தப்பட்டு வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒமைக்ரான் தொற்று ஏற்படாத வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெளிநாடுகளில் இருந்து ஈரோட்டுக்கு வந்த 290-க்கும் மேற்பட்டோர் தனிமை படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதேபோல் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 படுக்கைகள் இதற்கென்று தனியாக ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மணி ராஜரத்தினம் கூறும்போது, ஒமைக்ரான் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை பெருந்துறையில் உள்ள மறுத்த கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று தனியாக 20 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.
அந்த படுக்கை வசதிகள் அனைத்தும் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. ஆனால் நமது மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒமைக்ரான் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தற்போது பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnhealth.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today