ஈரோடு நவ 9:
தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணை, ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மழையால் மக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறை சார்பில் தீயணைப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் 150 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புழுக்காண்டி கூறியதாவது:-ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் 150 கைதேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இவர்கள் எத்தகைய சூழ்நிலையும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். மேலும், 6 ரப்பர் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கயிறுகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் நவீன எந்திரங்கள் என அனைத்து வகையான எந்திரங்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன.
நமது மாவட்டத்தை பொறுத்தவரை சத்தியமங்கலம், பவானி, அத்தாணி, கொடுமுடி, ஊஞ்சலூர் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் மட்டுமே அதிக அளவு பாதிப்பு இருக்கும். வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்தாலும் அதை நாம் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். https://www.tnfrs.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/