ஈரோடு ஆக 13:
ஈரோடு அருகே உள்ள நசியனூர் ராயபாளையத்தில் விவசாயி கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள புதிய ரக நிலக்கடலை விதைப்பண்ணையை, ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி ஆய்வு செய்தார். அப்போது அங்கு நிலக்கடலையின் மகசூலை அதிகரிப்பதற்காக ஒரு பெரிய காலி பேரலில், அதிக எடை கொண்ட கட்டையை உள்ளே வைத்துவிட்டு நிலக்கடலையின் பயிர்களின் மீது விவசாயிகள் உருட்டினார்கள். இதுபற்றி அதிகாரிகள் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், “நிலக்கடலை விதைத்த 40 முதல் 45-வது நாட்களில் செடியை சுற்றிலும் களை வெட்டி மண் அணைக்கும் போதும், களைவெட்டுவதற்கு முன்பாகவும் காலி பேரலில் எடை அதிகமான கட்டையை போட்டு, நிலக்கடலை செடிகளின் மீது உருட்ட வேண்டும். இதனால் செடிகளில் உருவான பூக்கள் விழுதுகளாக விழுந்து, மண்ணிற்குள் எளிதாக ஊடுருவி சென்று அதிக நிலக்கடலை காய்கள் உருவாகும்”, என்றனர்.
இதை பார்வையிட்ட இணை இயக்குனர் சின்னசாமி, “ஈரோடு மாவட்டத்தில் இந்த முறை புதிதாக உள்ளது. எனவே இந்த முறையில் அதிக மகசூல் கிடைக்கிறதா என்று கள ஆய்வு செய்ய வேண்டும்”, என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி, வேளாண்மை அதிகாரி ஜெயச்சந்திரன், உதவி விதை அதிகாரிகள் ஜெயராமன், ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today