ஈரோடு செப் 16:

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் கரும்பு தோகை தூளாக்கும் இயந்திரம், நாற்று நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட 18 வகையான டிராக்டர் மூலம் இயங்கும் புதிய இயந்திரங்கள் வரப்பெற்று குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.மேற்கண்ட அனைத்து கருவிகளும் வேலை ஆட்களின் தேவையினை குறைப்பதற்காகவும், வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்வதற்கும் மற்றும் சாகுபடி செலவினை குறைப்பதற்காகவும் பெரிதும் உதவுகிறது.

அதனைத் தொடர்ந்து கரும்பு சாகுபடியில் புதிய முயற்சியாக கரும்பு நாற்று நடவு இயந்திரம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த கரும்பு நாற்று நடவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம்    ஈரோடு அடுத்த சோளங்காபாளையம் கிராமம் கு.மோகனசுந்தரம் என்னும் முன்னோடி விவசாயி தோட்டத்தில் காண்பிக்கப்பட்டது.இந்த செயல் விளக்க நிகழ்ச்சியின் போது அதிகாரிகள் தெரிவித்ததாவது:தற்பொழுது கரும்பு பயிர் ஏற்கனவே நன்கு விளைந்த கரும்பின் கரணையை கொண்டு நடப்பட்டு விளைவிக்கப்படுகிறது. இதற்கு ஒரு ஏக்கருக்கு 3 முதல் 4 டன் கரும்பு தேவைப்படுகிறது. நடவு செய்வதற்கு அதிக கூலி ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்கு மாற்றாக தற்பொழுது வேளாண்மைப் பொறியியல் துறையில் ஒரு பரு சீவல் நாற்று நடவு முறை இயந்திரம் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கரும்பில் உள்ள ஒற்றை பருக்களை தனியே எடுத்து குழி தட்டில் வைத்து நாற்றுகளை தயாரித்து பயன்படுத்தும் முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

இந்த முறையில் ஒரு ஏக்கருக்கு சுமார் 600 கிலோ கரும்பு இருந்தால் போதுமானதாகும். குழித்தட்டில் வளர்க்கப்பட்ட நாற்றுகளை நாற்று நடவு இயந்திரத்தில் இரண்டு வரிசையாக தேவையான இடைவெளியில் குறிப்பிட்ட ஆழத்தில் நடவு செய்யப்படுகிறது.இதற்கு 20 முதல் 30 நாட்களான நாற்று போதுமானதாகும்.  இந்த இயந்திரத்தினை இயக்குவதற்கு 3 நபர்கள் போதுமானதாகும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 ஏக்கர் வரை நடவு செய்யலாம். இந்த நடைமுறையில் கரும்பு பயிருக்கான நீர் தேவை 30 சதவிகிதம் குறைகிறது. மேலும் தரமான நாற்று விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இந்த முறையில் களையெடுப்பது உழவு ஓட்டுவது, தோகை உரிப்பது மற்றும் அறுவடை செய்வதற்கு அதற்குரிய இயந்திரங்களை எளிதாக பயன்படுத்தலாம்.அதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் சாகுபடி செலவு பெருமளவு குறைக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர். இந்த செயல் விளக்கத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர் ந.உண்ணிகிருஷ்ணன், வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி, செயற்பொறியாளர் (வே.பொ), வி.கே.விஸ்வநாதன் மற்றும் பொறியாளர்கள், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் நுஐனு கரும்பு ஆலை அலுவலர்கள், காளிங்கராயன் வாய்க்கால் பாசன சபை தலைவர் வேலாயுதம் மற்றும் சுற்று வட்டார கரும்பு விவசாயிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/