ஈரோடு நவ 27:

உயர் கல்வி படிக்கும் மாணவ -மாணவிகள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து பின்னர் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்று, தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், இளங்கலை பட்டம், பொறியியல் மற்றும் மருத்துவக்கல்வி, பிறஉயர் கல்விப்படிப்பு ஆகிய ஏதேனும் உயர் கல்வி படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு ரூ.500 வீதம் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக மாநில தொழிலாளர் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 – -2022-ம் கல்வி ஆண்டிற்கான ஊக்கத்தொகை பெற தகுதி உள்ள ஈரோடு மாவட்டத்தை சார்ந்த தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தில் முன்னர் படித்த மாணவ -மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அதன்படி தாங்கள் படித்த சிறப்பு பயிற்சி மையத்தின் பெயர், சிறப்பு பயிற்சி மையத்தில் படித்த வகுப்பின் விபரம், படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி, கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் 2 புகைப்படத்தோடு ஒருவாரத்துக்குள் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 6-வது தளம், ஈரோடு – -638011 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

முன்னர் படித்த அல்லது தற்போது செயல்பாட்டில் இல்லாத இந்த திட்ட சிறப்பு பயிற்சி மையத்தின் விடுபட்ட மாணவ -மாணவிகளும் விண்ணப்பம் அளிக்கலாம். இதேபோல், தற்போது செயல்பாட்டில் உள்ள 15 தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட மையங்களின் பயிற்றுனர்கள், எழுத்தர்கள் அல்லது தொழிற்கல்வி பயிற்றுனர்கள் மூலமாகவும் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார். https://www.scholarships.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/

Open chat