ஈரோடு சூலை 17:

ஈரோடு அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்தால் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்வது குறைந்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.62 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை (மல்டி ஸ்பெசாலிட்டி) புதியதாக கட்டப்பட்டு வருகின்றது. 8 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தரைத்தளம் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கட்டுமான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றது. தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக உள்ள போதிலும் இதயம், நரம்பியல், தலையின் உள் பகுதியில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் இல்லாததாலும், டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாகவும் சேலம் மல்டி ஸ்பெசாலிட்டி அல்லது கோவை அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களுக்கு மேல்சிகிச்சைக்கு நோயாளிகள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஈரோட்டில் கட்டப்பட்டு வரும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்தால் கார்டியாலஜி, நியூரோ, காஸ்ட்ரோ என்டமாலஜி உட்பட பல நிபுணர்கள் பணியிடங்கள் முழுமையாக நிரப்பபடுவதோடு இப்பிரிவுகளுக்கான நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் தருவிக்கப்படும் என்றும், இதனால் மேல்சிகிச்சை பரிந்துரை என்பது 90 சதவீதம் குறைந்துவிடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்மருத்துவமனை கட்டுமான பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்து, விரைவாக கட்டி முடிக்க யோசனை தெரிவித்தார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today