ஈரோடு நவ 22:
மூன்று வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றது போல பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெறும், என்று கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., கூறினார். ஈரோட்டுக்கு வந்த சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவில் அமைதி வழியில் காந்தியடிகள் போராடி சுதந்திரம் பெற்றார். அதன்பின் தற்போது மூன்று வேளாண் சட்டங்களை விவசாயிகள் அமைதி வழியில் போராடி, அச்சட்டங்களை திரும்ப பெற செய்தனர்.
இது இரண்டாவது சுதந்திர போராட்டமாகும். விவசாயிகளுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் சார்பில், மோடி மிக விரைவில் இச்சட்டங்களை திரும்ப பெறுவார். அதுவரை எங்கள் ஆதரவு தொடரும் என ராகுல்காந்தி தெரிவித்தார். ராகுல் காந்தி கூறியதுபோல இச்சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் மீது மோடிக்கு கரிசனம் ஏற்படவில்லை.
15 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ., படுதோல்வியடைந்துள்ளதால், திரும்ப பெற்றுள்ளார். தற்போதைய தகவல்படி, உத்தர பிரதேசம், உத்ரகாண்ட், பஞ்சாப்பில் மிகப்பெரிய தோல்வியை தழுவுவார்கள் என தெரியவந்துள்ளது. குறிப்பாக, மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள, 70 தொகுதிக்கு பா.ஜ.,வினர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தலில் தோல்வி அடைவோம் என்பதால் திரும்பபெற்றுள்ளனர்.
வருகின்ற, 5 மாநில தேர்தலுக்காக மக்களை சந்தித்தபோது, விவசாயிகள் கேட்டு கொண்டபடி சட்டத்தை திரும்ப பெற்றுள்ளோம், என மோடி கூறுவார். அதனை மக்கள், விவசாயிகள் ஏற்க மாட்டார்கள். வரும் காலங்களில் மோடி அரசு படுதோல்வியை தழுவும். இதுவரை, 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துள்ளனர். அதற்கு பிரதமரும், பா.ஜ., அரசும் பதில் கூற வேண்டும்.
சென்னையில் தொடர் மழை, வெள்ள பிரச்னையில் முதல்வர் ஸ்டாலின், அசுர வேகத்தில் சுற்றுபயணத்தில் சென்று கொண்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கடலுார் மாவட்டம் என சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண பொருள் வழங்கி உள்ளார். மத்திய அரசிடம் ஒரு தொகையை அரசு கேட்டுள்ளது. நாளை அவர்களது குழு வருவதாக கூறி உள்ளனர். குழு பரிந்துரைப்படி அத்தொகை வந்ததும், மேலும் சிறப்பான பணிகள் மேற்கொள்வார்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பா.ஜ., அண்ணாமலை ஆர்ப்பாட்டம் செய்ய அறிவித்துள்ளார். இதே அண்ணாமலைதான், ‘மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வாய்ப்பே இல்லை. ஒரு கமாவைக்கூட அச்சட்டத்தில் இருந்து அகற்ற முடியாது,’ என்றார். ஆனால், அவரது பிரதமர், கட்சி அச்சட்டத்தை திரும்ப பெற்றுள்ளது.வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றதுபோல, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறுவார்கள்.
பிரதமராக மன்மோகன்சிங் இருந்தபோது, பெட்ரோல் நிறுவனங்களுக்கு மானியத்தை வழங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை வழங்கினார்கள். அதுபோன்ற நிலைக்கு பா.ஜ., அரசு வர வேண்டும். இவ்வாறு கூறினார். பின், டில்லியில் நடந்த விவசாய போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு தீபமேற்றி மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில், ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். https://www.petroleum.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/