ஈரோடு சூலை 2: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து துறை திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆலோசனை செய்தார். பின், அவர் பேசியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி ஈரோடு மாவட்டத்துக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், 100 சதவீதம் அனைத்து திட்டங்களையும் அமல்படுத்துவதற்கான ஆய்வு பணிகள் செய்யப்பட்டது. ஈரோட்டில் ஜவுளி மேம்பாடு தொடர்பான பல்கலை கழகம், வேளாண் பல்கலை கழகம் அமைக்கப்படும். அதற்கான இடம் தேர்வு செய்யப்படும்.

இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பிளாண்ட் அமைத்து, தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வழி செய்யப்படும். மஞ்சள் ஏற்றுமதி முனையம், வாசனை திரவிய ஆலை என பல்வேறு தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு காளை மாட்டு சிலையில் இருந்து நான்கு ரோடு, அரசு மருத்துவமனை, மேட்டூர் சாலை வழியாகவும், காந்திஜி சாலை, பன்னீர் செல்வம் பூங்கா, மணிக்கூண்டு வழியாகவும் செல்ல மேம்பாலம் அமைக்கப்படும்.

இதன் மூலம் போக்குவரத்து முற்றிலும் குறைக்கப்படும். தேவையற்ற வாகனங்கள், ஈரோட்டுக்குள் வந்து செல்வது குறையும். தவிர, அந்தந்த பகுதி மக்களின் தேவைகள், குறைகள் கேட்டு அவற்றை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரதிக் தயாள், மாவட்ட காவல் துறை கண்கணிப்பாளர் சசிமோகன், உதவி ஆட்சியர் ஏகம் ஜெ.சிங் உட்பட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே