ஈரோடு செப் 29:

பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களை அதிகாரிகள் அலைக்கழிக்க கூடாது என்று ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசினார்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் சார்பில் பயிர்கடன் மற்றும் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாச்சலம், சரஸ்வதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கொரோனா நிவாராண நிதி, கூட்டுறவுத்துறை சார்பில் 179 பேருக்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் உள்ளிட்டவைகளை வழங்கி பேசியதாவது, தமிழக முதல்வர் துறை ரீதியாக மாதந்தோறும் ஆய்வுகளை நடத்தி வருகின்றார். ஆய்வின் போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் கேட்டறிந்து வருகின்றார். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசு அலுவலகங்களுக்கு தினந்தோறும் வருகின்றனர்.இதில் சில கோரிக்கைகள் சட்டத்திற்கு அப்பால் உள்ளதால் தீர்வு காண முடிவதில்லை. ஆனால் தீர்வு காண வேண்டிய கோரிக்கைகளை காலதாமதமின்றி அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று போய், நாளை வா என்று காலம் தாழ்த்தி பொதுமக்களை அலைய வைக்க கூடாது. பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அரசு அதிகாரிகள் விளங்க வேண்டும். மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகள் அரசுக்கு தெரிவிக்கலாம்.இவ்வாறு அமைச்சர் முத்துசாமி பேசினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/