ஈரோடு செப் 7:

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள ஈரோடு ஜவுளி சந்தை மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. 700க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ள நிலையில், வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஜவுளி சந்தை நடைபெறுவது வழக்கமாகும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஜவுளி சந்தையில் கலந்து கொண்டு மொத்தமாக கொள்முதல் செய்வது வழக்கமாகும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களாக ஜவுளி சந்தை மூடப்பட்டுள்ளது. இதனால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டு சில்லரை வியாபாரம் மட்டுமே கைகொடுத்து வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதையடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஈரோட்டில் ஜவுளி சந்தை நடத்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது, கொரோனா கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதையடுத்து வாரச்சந்தைகள், கால்நடை சந்தைகள் நடத்த அரசு அனுமதி வழங்கி வருகின்றது. எனவே ஈரோட்டில் ஜவுளி சந்தை நடத்த அனுமதி வழங்க வேண்டும். சந்தை செயல்படாததால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சந்தை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/