ஈரோடு சூலை 29:
புதிய தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி அறிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்களை முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் என்ற நீட்ஸ் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதி பெற்று இருக்கும் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.21 வயதில் இருந்து 35 வயதுக்கு உள்பட்டவர்கள் தகுதியானவர்கள். சிறப்பு பிரிவை சேர்ந்த பெண்கள், பட்டியல் இனத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 45 வயது வரை தகுதியானவர்களாவர். தொழில் தொடங்க விண்ணப்பம் செய்பவர்கள் கடந்த 3 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. நீட்ஸ் திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடாக குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் இருக்க வேண்டும். அதிகட்பசமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம். அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் சேவை தொழில்கள் தொடங்கலாம். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மாசு ஏற்படுத்தும் தொழில்களாக இருக்க கூடாது. தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.50 லட்சம் வரை முதலீட்டு மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழீல் முனைவோருக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். பொது பயனாளர்கள் திட்ட மதிப்பீட்டில் தங்கள் பங்காக 10 சதவீதம் செலுத்த வேண்டும். சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும். பயனாளிகளுக்கு வணிக வங்கிகள் இல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மூலம் கடன் உதவி பெற பரிந்துரை செய்யப்படும். கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து தமிழக அரசு விலக்கு அளித்து உள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா நோய் தடுப்பு பொருட்களான என்.95 முகக்கவசங்கள், பிற முகக்கவசங்கள், மருத்துவர்களுக்கான பி.பி.இ., கிட், சானிடைசர், வெப்பநிலை கண்டறியும் கருவி, சோப்பு உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி பொருட்கள், நவீன மயமாக்கப்பட்ட தானியங்கி தறிகள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருள் நிறுவனம், கயிறு தயாரித்தல், என்ஜினீயரிங் வேலைப்பாடுகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே ஈரோடு மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வம் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகிய புதிய தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறப்பம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2 நகல்களை பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், ஈரோடு-–638 001 என்ற முகவரியில் வழங்கி பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today