ஈரோடு ஆக 9:

திரவ வடிவிலான நானோ யூரியா உரம் ஈரோடு மாவட்டத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: இந்திய உழவர் உரக்கூட்டுறவு (இப்கோ) நிறுவனம் மூலம் நானோ தொழில் நுட்பத்தில் உலகின் முதல் நானோ உரமான ‘நானோ யூரியா’ தயாரிக்கப்பட்டுள்ளது. யூரியா உரத்துக்கு மாற்றாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம். ஒரு மூட்டை (45 கிலோ) யூரியாவுக்கு பதிலாக, ரூ.240 விலை உள்ள 500 மில்லி லிட்டர் திரவமே போதுமானது. அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா உரமிடுவதற்கு மாற்றாக இதனை இலை மீது தெளிக்கலாம். இத்திரவம் இலை முதல் வேர் வரை சென்று பயிர்களுக்கு தழைச்சத்தை அளிக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில், 4 மில்லி லிட்டர் நானோ யூரியா கலந்து தெளித்தால் போதும். இதனால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், அதிக மகசூலும் கிடைக்க வழி வகுக்கிறது. ஈரோடு மாவட்டத்துக்கு முதல் தவணையாக, 240 லிட்டர் நானோ யூரியா வரப்பெற்று உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தியூர் அடுத்துள்ள எண்ணமங்கலம் பகுதியில் உள்ள மக்காச்சோளம் பயிருக்கு நானோ யூரியா உரம் பயன்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இவ்வாறு சின்னசாமி கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today