ஈரோடு செப் 22:

கற்போம் – எழுதுவோம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பிரசார வாகனத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் கற்போம் – எழுதுவோம் என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத ஆண்கள், பெண்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு கற்போம் –எழுதுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 16 ஆயிரத்து 364 பேர் கற்போம் – எழுதுவோம் திட்ட வகுப்புகளில் பங்கு பெற்று தேர்வுகள் எழுதி உள்ளனர். அதைத்தொடர்ந்து வருகிற 30ம் தேதி வரை கற்போம் எழுதுவோம் திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்காக பயிற்சி பெற்ற 8 கலைஞர்கள் கொண்ட குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களுக்கும் பிரசார வாகனத்தில் சென்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பிரசாரம் மேற்கொள்கிறார்கள்.

இந்த கலைக்குழு விழிப்புணர்வு பிரசார  வாகனத்தின் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். கலைக்குழுவினரின் மத்தள இசை, பறை இசை, விழிப்புணர்வு நாடகம் ஆகியவற்றையும் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.ராமகிருஷ்ணன், அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அதிகாரி எம்.சேகர், மாவட்ட கல்வி அதிகாரி சி.மாதேசன், மாவட்ட கல்வி அதிகாரி (பயிற்சி) மான்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கற்போம் – எழுதுவோம் கலைக்குழுவினர் 15 வயதுக்கு மேற்பட்ட பள்ளி இடைநின்ற சிறுவர் – சிறுமிகளை மீண்டும் படிக்க வலியுறுத்தியும், முதியோர்களுக்கு எழுத்தறிவு கற்பித்தல், பாலியல் வன்முறை, குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். 1098 என்ற கட்டமில்லாத தொலைபேசியை முறையாக பயன்படுத்துவது குறித்தும் விளக்குகிறார்கள். நேற்று சென்னிமலை ஒன்றியத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (புதன்கிழமை) மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியங்களிலும், 24ம் தேதி பவானி, கோபி ஒன்றியங்களிலும், 25ம் தேதி நம்பியூர் ஒன்றியம், 26ம் தேதி டி.என்.பாளையம் ஒன்றியத்திலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வருகிற 27ம் தேதி தாளவாடி ஒன்றியத்திலும், 28ம் தேதி சத்தியமங்கலம் ஒன்றியத்திலும், 29ம் தேதி அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/