ஈரோடு செப் 26:
ஈரோட்டில் நூற்றுக்கணக்கான சாய, சலவை, பிரிண்டிங் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சாயக்கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் சில தொழிற்சாலைகளில் சாயக்கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் கலந்து விடப்படுகிறது.
இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரத்தில் சாய துணிகளை கொண்டு வந்து அலசி செல்கிறார்கள். இதனால் காவிரி ஆறு மாசடைவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர். கடந்த வாரம் ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காவிரி ஆற்றங்கரையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு கும்பல் சாய துணிகளை அலசி கொண்டு இருந்தது. அவர்கள் அதிகாரிகளை பார்த்ததும் அங்கிருந்து தப்பி சென்றார்கள். அதன்பிறகு சாய துணிகளையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர். இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் பொதுமக்கள் சிலர் கருங்கல்பாளையம் காவிரிக்கரைக்கு சென்றனர். அப்போது சிலர் சாய துணிகளை ஆற்று தண்ணீரில் அலசி கொண்டு இருந்தார்கள். இதுதொடர்பாக ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகளும், கருங்கல்பாளையம் போலீசாரும் அங்கு விரைந்து சென்றார்கள். அதற்குள் சாய துணிகளை அலசி கொண்டு இருந்தவர்கள், அங்கேயே துணிகளை போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள். அதன்பிறகு சாய துணிகளையும், அந்த துணிகளை கொண்டு வந்த சரக்கு வேனையும் அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாய கழிவு நீரை யாருக்கும் தெரியாமல் நீர் நிலைகளில் திறந்துவிடப்படுவது தொடர் கதையாக இருந்தாலும், தற்போது காவிரி ஆற்றிலேயே நேரடியாக சாய துணிகளை கொண்டு சென்று அலசுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடிநீருக்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தப்படும் காவிரியில் சாய துணிகள் அலசப்படுவதை தடுக்க மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/