ஈரோடு சூலை 22:

ஈரோடு உணர்வுகள் அமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த குன்றி என்ற அடர்வனத்தில் உள்ள மலை கிராமத்தில் சிதலமடைந்து இருந்த நூலக கட்டிடத்தை புனரமைத்தனர். நவீன ஓவியங்கள் வரைந்து, ஈரோடு, பவானி உட்பட பல பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுால்களை சேகரித்தனர். தவிர நூலகத்துக்கான செல்ப், டேபிள், பேப்பர் வைக்கும் பகுதி என பலவற்றை வழங்கினர். இந்த அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் மக்கள்ராஜன் தலைமையில் நேற்று திறப்பு விழா நடந்தது. ஈரோடு எஸ்.பி., டாக்டர். சசிமோகன் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, நூலகத்துக்கு வந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். பின், அவர் பேசியது, வரும் காலங்களில் அனைத்து குழந்தைகளும் இந்த நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும். அதற்காக குழந்தைகளை கவரும் வகையில் தினந்தோறும் நூலகத்திற்கு வரும் குழந்தைகளுக்கு இனிப்பு, பரிசு பொருட்களையும் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

மலை கிராமத்து குழந்தைகளை மருத்துவராகவும், பொறியாளராகவும், சிறந்த வல்லுநர்களாகவும் மாற்றுவதற்கு இந்த நூலகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். மலை கிராமத்தில் உள்ள குழந்தைகள், பள்ளிப்படிப்பை விட்டு விடக்கூடாது. தொடர்ந்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சமவெளியில் ஏராளமான நூலகங்கள் உள்ளது. போட்டித் தேர்வுக்கு படிக்கும் தேர்வாளர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மலை கிராமங்களில் வாய்ப்புகள் இல்லாதபோது இங்கு நூலகங்களை அமைப்பதன் மூலமாக நல்ல அதிகாரிகளும், நல்ல மனிதர்களும் உருவாகுவார்கள். இதை செய்த உணர்வுகள் அமைப்பை நான் பாராட்டுகின்றேன், என்றார்.

உணர்வுகள் அமைப்பு நிறுவனத் தலைவர் டாக்டர் மக்கள்ராஜன் பேசியதாவது, சமவெளியில் ஏராளமான நூலகங்கள் உள்ளதன. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கும் அங்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் கடம்பூர் மலையில் இருந்து 18 கிலோ மீட்டருக்கு அப்பால் அடர் வனத்தில் குன்றி என்ற மலை கிராம பகுதி உள்ளது. இதனை சுற்றி 18 மலை கிராமங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படித்துக் கொண்டு உள்ளனர். இவர்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்றால், மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலை மீது ஏறினால் மட்டுமே இன்டர்நெட் இணைப்பு கிடைக்கும். இதையெல்லாம் நாங்கள் பார்த்த பொழுது மனம் வேதனைப்பட்டு இங்கு உள்ள பழைய கட்டிடத்தை புனரமைத்து, நூலகமாக மாற்றி இந்த நூலக வாயிலாக இங்குள்ள குழந்தைகள் நன்றாகப் படித்து பொறியாளராக, மருத்துவராக சிறந்த வல்லுனர்களாக மாறி தங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஈரோடு மாவட்ட பஞ்சாயத்துக்கள் இணை இயக்குனர் விஜயசங்கர், நூலகத்தைப் பார்வையிட்டு குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்களை வழங்கினார். குன்றி பஞ்சாயத்து தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் தலைவர் ரவி, மலைவாழ் கிராம மக்களின் சங்க தலைவர் ராமசாமி, ‘அறிவு’ என்ற திட்டத்தின் இயக்குனர்கள் ஜோதி, ஹக்கீம் பாட்ஷா, அலாவுதீன் மற்றும் உணர்வுகள் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today