சென்னிமலை செப் 11:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் என்ற பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது: கொடுமணலில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டு, தொல்லியல் துறையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றங்கரை வடகரையில் கொடுமணல் அமைந்துள்ளது. இப்பகுதியை நம்பி வணிகம் செய்துள்ளதை உறுதிப்படுத்த முடிகிறது. இங்கு, 3,000 ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்ததற்கான பல அடையாளங்களை உறுதிப்படுத்தி உள்ளனர். இங்கு தொல்லியல் களம், 50 ெஹக்டேர் வரை தோண்டி எடுத்துள்ளனர். இங்கு குடியிருப்புகள், புதை குழிகள், முதுமக்கள் தாழி போன்றவை இருந்தமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு பேராசிரியர் சுப்பராயலு, பேராசிரியர் ராஜன் உட்பட பலர் ஆய்வு செய்து பல அரிய தகவல்களை வெளி கொண்டு வந்துள்ளனர். இப்பகுதியில் அகழாய்வு விரிவுபடுத்தினால் கூடுதல் தகவல்கள், தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான பல அரிய வரலாற்று பதிவுகள் கிடைக்கும் என கூறுகின்றனர். இதுபற்றி முதல்வரிடம் தெரிவித்து தேவையான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். இங்கு கிடைத்த அரிய பொருட்களை கொண்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காட்சி அமைக்கப்படும்.இவ்வாறு கூறினார்.சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர் காயத்ரி இளங்கோ, துணை தலைவர் பன்னீர்செல்வம், தொல்லியல் துறை அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/