ஈரோடு டிச 30:
கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.227 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.
இத்திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம், பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 கிராம ஊராட்சிகள் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் பயன் பெறுகின்றது.
மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கேற்ப இப்புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் கிடைக்கும்.
வரும் 2050ம் ஆண்டு மக்கள் தொகைக்கு பயன்பெறும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிவடையும் நிலையில் உள்ளதால் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.twadbboard.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today